'சிவ'காமி அத்தை..!!

சிவகாமி அத்தை....!! version 1. Published on 04-03-2010   Version 2.0 20-dec-2015

"செவாமி....அடியே கிழட்டு சிறுக்கி....தெனமும் ஒரு குழுதாடி ( மாடு தண்ணீர் அருந்தும் தொட்டி ) திங்கரீல்ல? சரியா விளக்க மாட்ட...?
முறன்ஜோறு (முறம் நிறைய சோறு..) தின்றதுகளுக்கு புத்தி இருக்காது-ங்குறது சரியாதான் இருக்கு...."

சகட்டு மேனிக்கு சவட்டி எடுக்கும் பெரியம்மாவின் முறைவாசலுக்கு "இல்லம்மா...நான் நல்லாத்தான் விளக்குனேன்....." என்று மெதுவாக தனக்கு மட்டுமே கேட்கும்   குரல் ஒன்று கொல்லை புரத்தின் ஒரு ஓரத்தில் இருந்து வரும்.
செவாமி ...சிவாமி...செவகாமி...என்றல்லாம் அழைக்கபடும் சிவகாமி எனும் மூதாட்டியின் குரல். பாட்டி வயது என்றாலும் ... நாங்க அத்த-ன்னு தான் கூப்பிடுவோம் . அத்(தை)த  எங்களுக்கு எப்படி சொந்தம் என்பது...யாருக்குமே தெரியாத ஒரு புதிர்....! ..திடீரென்று...ஒரு நாள் ஞானோதயம் வந்து....அப்பாவிடம் கேட்டால் ஒரு சின்ன புன்னகை மட்டுமே பதில்....வற்புறுத்தினால்....ஒரு நீ..ண்ட உறவுமுறை வெளியே வரும்.
(இன்போசிஸ் Interview question puzzle  மாறி .... )
'அதாவது ரா ...எங்க தாத்தாவும் அவுங்க தாத்தாவும் பங்காளிகள் . அவுங்க பாட்டையாவும் எங்க பாட்டையாவும் ... ஒண்ணுவிட்ட ...
டாட் ..!! தயவு செய்து நிப்பாட்டுங்கள்.....!! இந்த ஒன்னுவிட்ட ன்னு ஆரம்பிச்சாலே ஒன்னுக்கு விட்ருது .

அப்பா எதிர்பார்த்ததும் இதுதானே....வயகாட்டுக்கு கிளம்பி விடுவார்...!! நமக்கு தெரிஞ்சது எல்லாம் pa  , grandpa
 பங்காளி...பாட்டையா...இதெல்லாம்...எதாவது காய்கறியா இருக்குமோ...?
....பெருசுகளின் நுட்பமான...பாசமான...உறவுமுறை...!

சிவகாமி அத்தை காலங்காலமாக எங்கள் வீடுகளில்.....சித்தப்பா வீடு, பெரியம்மா வீடு.....(கவனிக்க பெரியப்பா வீடு பெரியம்மாவின் அதிகாரத்தால்     பெரியம்மா வீடாக மருவி விட்டது ) . வயதாகி விட்டாலும் அது எல்லோருக்கும் அத்தை தான்....!!
ஒரு வேலை எங்கள் அப்பா ,சித்தப்பா,பெரியப்பாவின்....மேல் உள்ள அபார 'நம்பிக்கையால்' ....அவர்களின் மனைவிமார்கள் உருவாக்கிவிட்ட உறவுமுறையாக கூட இருக்கலாம். யார் கண்டது?.....பிறந்தது முதலே சிவகாமி அத்தை எனக்கு பரிச்சயம்.... சின்ன வயதில் 'அத்த ... எனக்கு கால் கழுவிவிடு...'.என்று சட்டயை தூக்கி கொண்டு நின்று சத்தம் போட்டால்....சாப்பாட்டை பாதியில் விட்டு விட்டு  வரும் தெய்வ பிறவி அது...

அத்தையின் பிளாஸ்பேக்  டெரர்ரானது . 13 வயதில் கல்யாணம்.....கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து பெல்ட்டால் விளாசி தள்ளும்  'எங்க வீட்டு பிள்ளை'.....!! அத்தனை அடி வாங்கியும் ...சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தால் எதுவுமே நடக்காதது போல்....தீயாக  எரியும்  புறங்கைகளை  தேய்த்து விட்டு கொண்டே .....'....ஒன்னும் இல்லேமா...அவரு பாட்டு பாடிட்டு கெளம்பிட்டாரு 'என்று மட்டுமே பதில் கிடைக்குமாம்....அவ்வோளோ பதி பக்தி (??!!). அப்பாவை பூரிகட்டையால் பூசை செய்யும் அம்மா சொல்லித்தான் தெரியும்....!
 இப்போல்லாம் நம்ம பொண்டாட்டிங்கதான் பாட்டு பாடிட்டு போகுதுங்க .
அத்தை பிளாஸ்பேக் கேட்ட அப்புறமா அத்தை மேல எரிஞ்சு விழுறத நிப்பாட்டிட்டேன் . அந்த கணேசன் மட்டும் கையில மாட்டுனா....மவனே...!

ஆனா நிஜம்மாவே Mr .கணேஷனுக்கு பாட்டு பாட தெரியுமாம் .

....பத்து வருட தாம்பத்யம் மட்டுமே ....!!  (நடந்துச்சா? )
'எனக்கு கலியாணம் ஆகும் போது..... 8 வயசு ...'
அத்தையின்  சோடா புட்டிக்கு பின்னே கண்ணின் pupil  விரிவதை உணரலாம் .
எனக்கு தான் காண்டு ஆகி விடும்.  எனக்கும் தான் 29 வயசு ஆச்சு.... ஏதாவது கண்டுகிறான்களா ? ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பாஞ்சுற போறேன்...அப்புறம் சங்கிலியில கட்டி தான் போடணும் .

சித்தப்பாகிட்ட என் குறைய மனுவா குடுத்தேன் . அந்தாளு ஒரு லூசு. கவுன்சிலர் . பேசுனா கேக்க மாட்டான் . மனு குடுத்தா உடனே பதில் வரும்.

  ஒரு ஊசி நூல் குடுத்து கோர்த்து கொண்டான்னாரு. கண்ணு ஒண்ணரை ஆனதும் வாய் அர்ஜுன் மாதிரி ஆனதும் தான் மிச்சம்.

அப்புறம் அவரு பட்டா பொட்டி டிரௌசர் கயிறு ஒரு பக்கம் உள்ள இழுத்துக்கிச்சு , ஒரு குத்தூசிய கையில குடுத்து இதை எடுத்துகுடு அடுத்த வாரமே உனக்கு கல்யாணம் ன்னாரு ....மொத்த கயிரையும் உருவி கையில குடுத்தேன் . ஏற இறங்க பாத்துட்டு , உனக்கு இந்த ஜென்மத்துல னு ஆரம்பிச்ச உடனே வாய பொத்தி ...போதும் நிப்பாட்டிக்கோன்னு கை காட்டிட் டேன் .

கேட்டா ....Maturity வரலியாம்....maturiyaa ?  டேய் இப்புடியே விட்டீங்கன்னா  இன்னும் 2 வருஷத்துல எதுவுமே வராதுடா.

சிவகாமி அத்தை கிட்டே கேட்டா எதுவுமே முழுசா வெளியே வராது . சரியான அண்டா முழுங்கி .

அத்தை வீட் டுகாரரு பேரு கணேசன் . அதுனால நடிகர்  சிவாசி
( சிவாஜி )வந்தாரு ....செமினி (ஜெமினி) போனாரு-னு சொல்லுமே தவிர
'கணேசன்'  மட்டும் அது வாயிலிருந்து வரவே வராது .  (என் பொண்டாட்டி வாய்ஸ் எக்கோ அடித்தது  'டேய் கொக்கி குமாரு ...ஏன்டா உனக்கு எத்தனவாட்டி சொல்றது ...அறிவே வராதா ?)

கணேசனும் ஒரு  நாள்   போய் சேர்ந்துவிட ....நாங்களே கதி...! விதி செய்த சதி..!
அந்த கண் புரை ஆபரேஷன் -க்கு பிறகு .....அத்தை சோடா புட்டியுடன் பெருமையாக வலம் வந்தது. அது தனக்கு ஆபரேஷன் என்பதை எதோ அவார்ட் மாதிரி போய் ஊரெல்லாம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தது .
'கண்ணு நொள்ளையா போயி ....சோடா புட்டி போடுறதுல  என்ன பெருமையோ ...?'-  பெரியம்மாவின் வசவு வழக்கம் போல 'காற்றில் அலைந்து ...அத்தையின் தீராத சோகங்களை காற்றில் எழுதி செல்லும்'
 .(நன்றி : கவிஞர் பிரமிள் )

அப்பா தான் சொன்னார் . 'பாத்தியா ...அது வயசு கிழவிகல்லாம் கண்ணு அவிஞ்சு ஆபரேஷன் பண்ண காசும் இல்லாம கவனிக்க ஆளும் இல்லாம மூலையில மொடங்கிருச்சுங்க ...இதுக்கு பாரு பெருமை தாளல ..'
அட வல்லரசு இந்தியாவே ..!!
இதை கேட்டதும் எனக்கென்னமோ சம்மந்தமே இல்லாம அழகிரி பையன் டெய்லி டியூசனுக்கு பிளைட்-ல கொழும்பு போயிட்டு வந்தது (கேள்வி பட்டது ) நினைவில் வந்து போனது .

இன்னொரு முறை எனது தாத்தா, a very busy man ,(24 மணி நேரத்துல தூங்குற 8 மணிநேரம் தவிர மத்த நேரம் பூரா வெத்தலையை குதப்பும் ஒரு பிஸியான மனிதர் ), கிட்டே கிளறும்போது தான் ...அவரு வெத்தலை சார வெங்கல குப்பில துப்பிட்டு சொன்னாரு.
'கணேசன் பெரிய பாட்டுக்காரன்டா ...வெண்கல குரலு ...கணீர்னு அவன் குரல் எடுத்து பாடுன்னானா ..இன்னிக்கு பூரா கேட்டுகிட்டே இருக்கலாம் . ஆளு வேற அம்புட்டு செவப்பா வசியமா இருப்பானா ....எல்லா பொண்டு புள்ளைங்களும் அவனை வச்ச கண்ணு வாங்காம பாக்கும் . அவனுக்கு பக்கத்தூரு பாட்டுக்காரி ஜமுனா ராணி கூட பழக்கம் (காதல் ). இவிங்க பழக்கம் தெரிஞ்சு போயி ..அவள தாய் மாமனுக்கே கட்டி குடுத்து புட்டானுங்க . நம்ம சாதியா  இருந்திருந்தா கட்டி வச்சிருக்கலாம் ..அவ வேற சாதிக்காரி .  அப்புறம் அவன் பொழைக்க கோயில் தர்மகர்த்தாகிட்டே வேலைக்கு சேந்துட்டான் . அவுங்க அம்மா சாக கிடக்கையில கையில துட்டு இல்லே . நம்ம செவாமி அப்பன் எம்மவள கட்டிக்க உங்கம்மாவ காப்பாத்துறேன்னு காசு குடுத்தாரு . அப்புடிதான் செவாமி நம்ம கணேசனுக்கு வாக்க பட்டுச்சு . ஒரு பெரிய சோக காவியத்தை எதோ வெத்தல மெல்லுவதை போல சொல்லிய தாத்தாவை பார்க்க கடுப்பாகியது . ஆக எல்லாம் சேர்ந்து சிவகாமிய கெடா வெட்டிருக்கீங்க .
கணேசன் ஐயா மீது முதல் முறையாக பரிதாபம் வந்தது .

இந்த கதைய எங்கியோ கேட்டாமாறி இருக்கேன்னு நானும் கொல்லபுரத்துல மொட்டை மாடியில ன்னு எல்லா இடத்துலயும் குத்தவச்சு யோசிச்சா ..."நம்ம 'தேவர்மகன் '  'தேவதாஸ்'  கத தான்.. 1960-யிலே நம்ம பேமிலி யிலே ரிலீஸ் ஆயிருச்சு" அப்புடிங்குறாரு சித்தப்பு 2 நொங்க சைடு வாயிலே குதப்பிக்கிட்டே .
ஆனா யோசிச்சு பாத்தா எல்லா லவ் பெயிலியர் கதையும் ஒரே மாவு தான் . பட் சளிக்காத புளிக்காத மாவு. எத்தனை இட்லி வேணாலும் ஊத்தலாம் , பட் வெரைட்டியா ஊத்தணும்.

பெரியம்மாவுக்கு பெரியப்பா மேல் கோபம் வந்தால் ...அத்தைக்கு புளித்த வாடை அடிக்கும் பழைய கஞ்சிதான் .....பெரியப்பாவின் நிலைமை இன்னும் மோசம் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.....!! கெடா  ராயனுக்கு(பெரியப்பா)...கொழுப்பு கூடி போச்சு.... என்று..ஆரம்பித்து...இன்ன பிற வஸ்துகள் எல்லாம் தங்களை கௌரவமாக கருதும் அளவுக்கு....(பெரியப்பாவுடன் ஒப்பிடுகையில்..)...வீடு கலை கட்டும்...சிவகாமி அத்தை..புன்னகை அணிந்து பார்த்த தருணங்களில் அதுவும் ஒன்று....!!
பெரியப்பாவை திட்டினால் அத்தை பயங்கர  குஷியாகி விடும்....அது சிரித்து யாரும் பார்த்ததில்லை....(வயதான யாரும் மனம் விட்டு  சிரித்து யாரும் பார்த்ததில்லை....என்பது என் எண்ணம்...)....sigmund freud சொன்னது போல ....செக்ஸ் உணர்வு குறைத்தால் எல்லாமும் குறைந்து போய்விடும்போல...கௌரவமாக சொன்னால்..இளமை குறைய குறைய.....மனதின் வளமையும் வலிமையும்  குறைந்து விடுகிறது ..!

தனக்கு இது வேண்டும் ...அது வேண்டும் என்று கேட்டு ஒரு நாளும் பார்த்ததில்லை....வருடத்துகொரு முறை ஒரு சேலை வாங்கி கொடுப்போம்.....தீபாவளி அன்று....அதையும் கட்டாமல் சேர்த்துவைத்து.......தன்னிடம் காசும் பார்க்க வரும் அக்கா தங்கை களுக்கு மஞ்சள் பையில் ஒளித்து வைத்து அனுப்பி விடும்....அதையும் CID அம்மா கண்டு பிடித்து ...'அடுத்த தீவாளிகெல்லாம் உனக்கு ஒன்னும் கிடையாது...சும்மா திரி...' என்று..ரெண்டு திட்டு விட்டாலும்....சத்தம் போடாமல் கமுக்கமாக, பிறந்த வீட்டுக்கு 'செய்த' பெருமையுடன்.. வீட்டை பெருக்க ஆரம்பித்து விடும்....!!


அத்தை சும்மா இருந்து யாரும் பார்த்த தில்லை...ஒருவேலையும் இல்லை என்றால்...செடிக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்து விடும்.....அதுவும் முடிந்துவிட்டால்....கூட்டிய வீட்டையே மீண்டும் கூட்ட ஆரம்பித்து விடும்.....அம்மா கடுப்பாகி "கை சும்மா இல்லேன்னா....அந்தா அந்த எறும்பு புத்துக்குள்ள கைய விட வேண்டியது தானே" ....என்றால்...'டப்' என்று விளக்கு மாற்றை  போட்டு விட்டு அதே இடத்தில் உட்கார்ந்து விடும்.....!!
அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு தேயிலை (Tea ) கிடைத்துவிடும் . தேயிலை மட்டும் எத்தனை தடவை கொடுத்தாலும் ரசித்து சுவைத்து குடிக்கும்.

பொய் சொல்ல தெரியாது . திருட்டு வரவே வராது . நம்பி லாக்கர் சாவியை கொடுக்கலாம் . தங்க கட்டியை மூட்டை கட்டி கொடுத்தால் ...'ஆத்தாடி இதுதான் தங்கக்கட்டியா ?...இந்தாம்மா சூதானமா  வச்சுக்க ..என்று நமக்கு அட்வைஸ் கொடுத்து விட்டு போகும் .

ஒருமுறை கண்ணுக்கு மருந்து ஊற்றி விட சொன்னது அத்தை . நான் மருந்து  விட்டால் அதற்கு ஒரு ஆனந்தம். இரண்டு சொட்டு விட்டு எழும்போது அத்தை கண்ணை பிடித்து கொண்டு துடித்து எழுந்தது 'அய்யோ ...எரியுதேயா ....எரியுதே ' என்று....அப்போதுதான் அறிவு வந்தது அது கண் மருந்து அல்ல மண்ணெண்ணெய் என்று. நான் தான் அந்த விஞ்ஞானி . அத்தையின் காலி குட்டி மருந்து  ட்ராப்ஸ்  பாட்டிலில் பூரான் நுழைந்த ஒரு சுவர் கீறலுக்குள் மண்ணெண்ணெய் விடுவதற்கு நான் தான் ஊற்றி வைத்திருந்தேன் .

எனக்கு ஐயோ என்றாகி விட்டது. கை காலெல்லாம் உதறியது .முதல் முறை என் மீதே காரி துப்பும் அளவு கோவமும் கூடவே கழிவிரக்கமும்  வந்தது .

அந்த கண் எரிச்சலிலும் தட்டு தடுமாறி ...'பரவாயில்லய்யா...நீ என்ன வேணுமுன்னா செஞ்ச , தெரியாம தான , போ ..போய்  படு ' என்றது .

 எனக்கு கண்ணில் நீர் முட்டி கொண்டது . அப்புறம் தண்ணீர் எடுத்து கண்களை கழுவ வைத்து , மருந்து போட்டு விட்டு ..'ம்ம்...இப்ப கொஞ்சம் குளு குளு  ன்னு இருக்குய்யா ' என்ற பின்னே தான் நகர்ந்தேன் .

அதற்குள் விஷயம் வீட்டிற்கு தெரிந்து ஆளாளுக்கு  எனக்கு 'பரிவட்டம்' எல்லாம் கட்டி 'ராஜமரியாதை ' செய்து  முடித்திருந்தார்கள் .

அத்தை காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடும்.....வீடு கூட்டி வாசல் தெளித்தல்...முதல் கடமை....இல்லாவிட்டால் அன்று இந்தியா -வின் GDP குறைந்து போய் விடும்...!! 6 மணிக்கு பச்சை தண்ணீரில் குளித்து ....நெற்றி சிறிது தெரிந்தாலும் மகா குற்றம் எனும் வாக்கில் விபூதி...!!
எவளோ பசித்தாலும் வாய் விட்டு கேக்காது...
...அவ்ளோ கண்ணியம்...!! ஒரு முறை அம்மாவிடம் பந்தயம் கட்டினோம் நானும் எனது அக்காக்களும் ....அம்மா சொன்னார்கள்...ம்ம்...அது கேக்காது என்று....அன்று ஒன்றும் போடவில்லை....10 மணிக்கு தட்டை எடுத்து நின்றது . அம்மா கண்டுகொள்ளாமல்...இருந்தவுடன்....தட்டை வைத்துவிட்டு.....கிளம்பிவிட்டது...வேறு எங்கு ..வீடு கூட்டத்தான்....!!

மணி 12 ஆகி விட்டது..ம்ம்..க்கும்..ஒரு reaction -னும் இல்லை.. என்ன பொம்பள டா இது ? என்றாகி விட்டது. அம்மா தான் எங்கள் மீது கடுப்பாகி விட்டார் . போதும்டா ..வயசான காலத்துல ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட போகுது ...இந்தா இந்த கிண்ணத்துல இருக்க புளியோதரைய குடுத்துரு அதுகிட்ட .அதுக்கு புளியோதரைன்னா உசிரு ..' என்று சொல்லிவிட்டு அவசர  அவசரமாக ரேஷன் கடைக்கு கிளம்பி விட ....
அத்தை மெதுவாக 12 .30 க்கு kitchen பக்கம் சென்றது...

ஹ..ஹா..பசி என்றால் பத்தும் பறந்து விடும்-கிறது சும்மாவா?....அத்தை புளியோதரையை திருடி வாயில் போட போகிறது ...
மெதுவாக அதை முன்னே விட்டு ..சிறிது நேரம் கழித்து நாங்கள் எல்லோரும்  பின்னே சென்றோம்.
....ஆளை காணோம்....
எங்கே டா என்று தேடினால்....kitchen குப்பை தொட்டி அருகே.....கையில் விளக்குமாறுடன்....மயங்கி கிடந்தது அத்தை......சிவத்தை காமித்த ....சிவகாமி அத்தை...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்