ஒரு பாட்டியும் இரண்டு இட்லியும் 

அது 2001.

தி.நகர் சலசலப்புக்குள் எங்கள் நண்பர் குழாமின் கலகலப்பு . இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி . Festive in the air ..என்பார்களே...ஒவ்வொரு தீபாவளியின் போதும் நம்மால் அதை உணர முடியும்.  ஆனால் 40 க்கு அப்புறம் எல்லா நாளும், இரவும் பகலும் ஒன்றே. எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை.

ஊரே தீபாவளி மூடில். சிலர் மட்டும் தீராவலி மூடில் . 

1. ரவி ('கிளி'-அழகிய மூக்கு -நாங்கள் கிளி-யாக்கி விட்டோம் ) ,

2. கார்த்திக் (கடி- கடி ஜோக்-காஆஆ  சொல்வதால் ),  எல்லோரும் டேய் கடியா தான்.  'கார்த்தி இங்க வாயேன்' என்றால் மறுநாள் செமஸ்டர் என்று அர்த்தம். அவன் தான் எல்லோருக்கும் சொல்லி கொடுப்பான்.

  அதிலும் சுடச்சுட 'வாழைக்காய் பஜ்ஜி ' வெங்காய பஜ்ஜி with  கெட்டி சட்னி  வாங்கி குடுத்தால்  வெத்து பேப்பரில் கையெழுத்து போட்டு 'வச்சுக்கோ...என் செல்லம்' என்று குடுத்து விடுவான். 'நாக்கிற்கு நான் அடிமை' என்று பெருமையாக சொல்லி கொள்வான்.

எக்ஸாம் வந்தால் ஒரே  கார்த்திக் 'சார்' தான்.அவனும் ஆறு மாதத்திற்கொருமுறை தன் திருநாமத்தை கேட்பதில் பயங்கர குஷியாகி விடுவான். எக்ஸாம் முடிந்த அடுத்த நாளே 'டேய் கடியா ...ஒரு ஜோக் சொல்லு பாப்போம் ' என்று ஆரம்பித்து விடுவோம்.

3. செந்தில்- 39kg  (சிங்கம்புலி - தனி புத்தகம் தான் போட வேண்டும் )

4. ஷண்முக வடிவு(இட்லி கண்ணன் அல்லது வடிவு ) -வடிவு என்பது பெண் பெயர் போல் இருப்பதால் அவர் தன்னை "Hi ,I am Shan...you? " என்று கை நீட்டும்போழுது நாங்கள் கெக்கே பிக்கே என்று சிரித்து விடுவதுண்டு . 

5. மற்றும் குரு aka தூங்கமூஞ்சியான் .தூங்குவதில் அலாதி பிரியம் . 

சில சினிமா ஹீரோயின்களிடம் பேட்டியில் 'உங்கள் பொழுதுபோக்கு ?' என்றால் 'நல்லா தூங்குவேன்...I Love Sleeping -என்பார்கள். இவரும் அப்புடிதான்.

இரண்டரை வருடத்தில் லஞ்ச் -கு அப்புறம் அவர் கிளாஸ் அட்டென்ட் பண்ணியது அழகிய டெய்சி மேடம் கிளாஸ் மட்டுமே . அதுவும் 3 மாதங்கள் மட்டுமே  . எங்க HoD wife ஒரு நாள் டிபார்ட்மெண்ட் -க்கே வந்து சவுண்ட்  விட்டதும் அவுங்க ரிசைன் பண்ணி போனதும் மட்டுமே எல்லோருக்கும் தெரியும். அதன் பின்னணி உள்குத்து எல்லாம் தனிக்கதை. அவங்க ரிசைன் பண்ணியதும் இவரும் மதியம் கிளாஸ் அட்டென்ட் பண்ணுவதிலிருந்து ரிசைன்  பண்ணிவிட்டார்.

எங்களில் எவனுக்கும் வேலை இல்லை . All Unemployed. எங்கள் ராசி அப்படி.

கடந்த வருடம் இந்நேரம் எங்கள் சீனியர்கள்  அத்தனை பேரும் Placed . 100% Placement. அவனுங்க கூட பரவால்ல ...just  மிதப்பா தான் நடந்தானுங்க . 

எங்களைதான்  பிடிக்க முடியவில்லை . எல்லாம் தலைகீழா நடந்து கொண்டிருந்தோம் .அதுவும் அந்த  பிரபு(100 கிலோ) குண்டன் இருக்கானே ....அவனெல்லாம் பண்ணாத அக்கிரமமா ? ஒரு சீனியர் place ஆயிர கூடாது  

"டேய் நம்ம ஸ்ரீராம் அண்ணா பிளேஸ் ஆயிட்டாங்கடா ...என்று எவனாவது ஹாஸ்டல் காரிடாரில் நின்று கத்துவான். 

அவ்வளவுதான்...கைலியில் கக்கத்தை சுரண்டிக்கொண்டு நக்கீரன் படித்து கொண்டிருப்பவன்...தடால் புடால் என்று எழுந்து ...அடுத்த 5 நிமிடத்தில் -டை கட்டி கொண்டு  full -formals-ல்  உடனே ஜூனியர் பொண்ணுங்ககிட்ட போய் ..."இங்க பாருங்க girls ...இன்போசிஸ் மாறி மொக்க கம்பெனி எல்லாம் நான் சூஸ் பண்ண மாட்டேன்...I will choose either Google or Microsoft. Roll up your Sleeves...என்று அதுகளின் sleeveless கையை முறைத்துக்கொண்டே சொல்லிவிட்டு " Get ready your CVs now itself. I can push it inside. Keep in touch with me ...ok..." - இதை ஒரு hobby -யாகவே செய்து வந்தான்.

அவன் அலும்பும்போது அது 2001 ஜூன் .

அவன் அவுங்க அப்பா மெஸ்ஸில் பாவமாக இட்லி பொட்டலத்தை கட்டி கொண்டிருக்கும் போது ....2002 ஜனவரி . அவன் இட்லி பொட்டலம் போடும்போது எங்களுக்கு "....I will choose either Google or Microsoft. Get ready your CVs now itself. I can push it inside.." தான் எக்கோ ஆகும் . 

நாங்கள் வேணுமின்னே அவன் கடைக்குதான் போவோம் .  அவன் பக்கத்துல கொஞ்சம் தள்ளி நின்னுட்டு " .I will choose either Google or Microsoft. Get ready your CVs now itself. I can push it inside  " என்று அவன் எங்களை கவனிக்கும் வரைக்கும் சொல்லி கொண்டே இருப்போம் . அவன் கவனித்து விட்டால்..."கடைசியில இட்லிய பார்சல்-ல புஷ் பண்ண விட்டாய்ங்களேடா மச்சி"...ன்னா அந்த காண்டாமிருகம் காண்டாகி  போய்  'டேய் ...வெந்த புண்ல வேல் பாய்ச்சாதீங்கடா...போய் தொலைங்கடா ' என்று முட்ட வந்துவிடுவான் 

 எங்களில் எவனுக்கும் வேலை இல்லை . All Unemployed.சேர்ந்து கும்மியடிக்கும்போது கவலையுமில்லை . மனிதன் ஒரு சமூக மிருகம் என்று சும்மாவா சொன்னார்கள்.

தனியாக இருந்தால் தூங்கி கொண்டிருக்கும் கவலை கூட எழுந்து உன்னை பார்த்து கும்மி கொட்டும் . நண்பர்களுடன் இருக்கும்போது கேன்சரே  இருந்தாலும் கேர் பண்ணிக்காது . 

குழு மனம் குளுகுளு மனம். தனி மனம் பிணி மனம்.

செந்தில் என்ற சிங்கம்புலி தான் ஓட்டுவதற்கு எங்களுக்கு கிடைத்த தொத்த குதிரை .  கிண்டலுக்கு கூப்பிட ஆரம்பித்து அதுவே பேராகி விட்டது.  ஆனால் அது அவனுக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது . அப்புறமெல்லாம் செந்தில் என்றால் அய்யா திரும்புவதில்லை.

எல்லாம் கூட்டமாக ஹாஸ்டலில் இருந்து கிளாஸ் -க்கு  போய் கொண்டிருக்கும்போது நான் 'டேய் செந்தில்...டேய்...'  கத்தினாலும் ..ம்ஹூம் ...திரும்பவில்லை....அவனது நோக்கம் புரிந்து விட்டது....எல்லோர் முன்னாலும் சிங்கம்புலி-என்று நான் கூப்பிட வேண்டும்...அவர் ரஜினி இன்ட்ரோ சீனில் திரும்புவாரே அது போல் திரும்ப வேண்டும்....எனக்கு கடுப்பாகி ..'டேய் சூம்ப நாயே ...உன்ன தாண்டா ' ன்னு கத்திய பின்னே ...தலையை குனிந்து கொண்டு ...குடுகுடு வென்று என்னை நோக்கி ஓடி வந்து ..மச்சி நீ எப்போவும் சிங்கம்புலி-ன்னு தானே கூப்புடுவ..அதே பேர் சொல்லி கூப்பிடு மச்சி...உனக்கு இன்னிக்கு கான்டீன் ல காபி வாங்கி தர்றேன் ...எதோ ஆயிரம் பொற்காசு பரிசளிக்கும் பாண்டிய மன்னன் ரேஞ்சுக்கு அந்த 'காபி' என்பதை அழுத்தி சொல்லவும் நான் இன்னும் காண்டாகி ' காபி தான ...காரா வாங்கித்தரப்போற ...குச்சி மிட்டாயி ' என்றவுடன் டப்பென்று தொடையை பிடித்து கொண்டு 'இதை உன் காலா நெனச்சு கேக்குறேன் ப்ளீஸ் ...அந்த பேர மட்டும் சொல்லாத ' என்றான்.  அவன் ஆளு முன்னே போகுதாம். 

'கொஞ்சம் கீழே குனி...காலு உனக்காக வெயிட்டிங் -என்றேன் ....கெக்கே பிக்கே என்று சிரித்துவிட்டு 'குறும்பு '  என்று  'அந்த' இடத்தில் கிள்ளி விட்டு ஓடிவிட்டான். பயபுள்ள வேணுமின்னே அழுத்தி கிள்ளி இருக்கு....உயிரே போச்சு.

 செந்தில் என்ற சிங்கம்புலி தான் ஓட்டுவதற்கு எங்களுக்தான் கு கிடைத்த தொத்த குதிரை. பக்கத்தில் இடியே விழுந்தாலும்  'என்னத்த கன்னையா ' ஸ்டைல்-ல் ...என்னாது ...இடியா ? என்பான்  சாவகாசமாக ...அவனது body rhythm மிக மெதுவானது .

அட்டெண்டன்ஸ் சொல்லும்போது கூட அவன் செந்தில்-லாக இருப்பதில்லை ... அவனுக்கு ரெண்டு பேர் தள்ளி வரும் சிவா-வாக தான் எழுவான்.

அவனால் எதையும் வேகமாக செய்யலாகாது.  ஆனால் முழுமையாக செய்ய முடியும் .

படிப்பிலும் அவ்வாறே ...நாங்கள் 40வைத்து பக்கத்தை தாண்டும்போது அது 6ம் பக்கம் முடித்து 7-ம் பக்கத்துக்கு போக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருப்பான் .

அவனை பொருத்த வரை ஒவ்வொரு பக்கமும் ஒரு அரங்கேற்றம் தான். ஆனால் ஒருமுறை படித்தால் அவனுக்கு மறுமுறை படிக்க தேவை இல்லை .

அதனாலே அவனை செல்லமாக 'Zen' ந்தில் என்பேன். ஜென் இதைத்தான் போதிக்கிறது . நிதானமான தியானம் . தியானமான நிதானம்.

தி.நகர் சலசலப்புக்குள் எங்கள் நண்பர் குழாமின் கலகலப்பு.

வழக்கம்போல் நாங்கள் அவனை  ஓட்டுவதை ரசித்து கொண்டிருந்தான்..zenthil ...மிக ஒல்லியான உருவம் ...எலும்பு கூடாக படைத்து விட்டால் கஷ்டம் என்பதால் சிறிது சதையை எடுத்து பூசி அனுப்பி இருக்கிறார் கடவுள்...வகிடெடுத்து சீவிய தலை. தலையணை உறைக்கு போட வேண்டிய டிசைன்-ல் சட்டை. 39kg . அதனால் எங்களுடன் சேர்ந்து எடை பார்க்கும்போது பாண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு பெரிய கல்லை எடுத்து போட்டு கொள்வான். பின்னாளில் ஒருநாள் மாட்டி கொண்டது ஜந்து .

தி.நகரில் விண்டோ ஷாப்பிங் முடித்துவிட்டு டீ  காபி சாப்பிட ஒரு டிபன் சென்டர்-குள் நுழைந்தோம் . ஆனால் ஒருத்தனும் டீ காபி சொல்லவில்லை . ஆளுக்கு ஒரு ஸ்னாக்ஸ் choose பண்ணி கொண்டிருந்தோம்.

மொத்தம் 5 பேர் ...3 ஐட்டம் வாங்கி ஷேர் பண்ணிக்கொள்ள திட்டம் . வயிற்று பசி. ஸ்னாக்ஸ் டிபனாக மாறியது .

ரவா மசாலா ஒன்று ...குழி பணியாரம் ஒன்று...ஒரு நெய் தோசை...

ஆர்டர் கொடுக்கும்போதே கிளி -க்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் ...'ஐயோ இவ்வளவு காசா என்று '.

ஆனால் வாய் திறந்து சொல்லி கொள்ள மாட்டான் ...அவன் கண் அகல திறந்து மூடுவதை பார்த்து புரிந்து கொள்ளலாம்.

சிங்கம்புலி-யோட technique-கே வேற ...ஆர்டர் பண்ணும்வரை அத பண்ணலாமா ...இது...இது சூப்பரா இருக்குமடா ...இது பட்டய  கிளப்பும் ...இதுல ரெண்டு சொல்லுவோம்...ன்னு ஒரே ரெகமெண்டஷன். 

கவனிக்க ... 'சொல்லுவோம்...சொல்லுவோம்-ன்னு  தான் சொல்லுவாரே  தவிர ...எனக்கு இது வேணும்ன்னு சொல்ல மாட்டார்...பின்னாடி சட்ட சிக்கல் எதுவும் வந்துரக்கூடாதுல்ல . வெவரம் . உடம்புல சதைதான் கம்மி...மிச்சது எல்லாம் எலும்பும் ஏமாத்தும் தான்.

 'சார் ...உங்களுக்கு ..' என்று கேட்டாலும் காது கேக்காத மாதிரி ஆக்ட்டிங்.
 சர்வர் ஆர்டர் எடுத்துட்டு போகும்வரைக்கும் மெனு-வ படிக்கிறா மாறி ஒரே ஆக்ட்டிங். செமெஸ்டர்க்கு கூட ஐயா இவ்வளோ கவனத்தோடு படிச்சிருக்க மாட்டார். அம்புட்டு கவனம்.

 ஒரு முறை ஒரு சர்வர் திரும்ப திரும்ப 'சார் உங்களுக்கு ...சார் உங்களுக்கு ?'என்று கேக்க...நம்ம சிங்கம்புலி பல்லை கடித்து கொண்டும் ... கோவத்தை அடக்கி கொண்டும் ...குனிந்து மெனுவை பார்த்து கொண்டிருந்தார்...

குரு 'அவரு ஆர்டர் எல்லாம் குடுக்க மாட்டார் . கொண்டு வந்தா திங்க மட்டும் செய்வார் ' என்று கூற அவர் சிரித்து கொண்டே சென்று விட்டார் .

'அதான் ஆர்டர் பண்ண போறதில்லையே ...அப்புறம் என்ன வெளக்கெண்ணெய்க்கு மெனு ம*ர-வே பாக்குறா மாறி ஆக்ட்டிங்...ன்னு மெனு-வ புடுங்கி மண்டைலே நாலு சாத்து சாத்தினான் ஷான் .

உர்ர் என்று மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டான்...அப்பாடா ஒரு பங்கு குறைஞ்சது-னு நெனச்சு நிம்மதி பெருமூச்சு விட்டது தப்பா போச்சு ....திடீர்னு 1000 வாட்ஸ் பிரகாசம் அவன் மூஞ்சில ...'மாப்பிள் ...என்ன மாப்பிள் ...நீ இன்னிக்கு கொஞ்சம் சிவப்பா இருக்க ..' என்று ..என்றுமே நடக்காத நடக்க முடியாத ஒரு விஷயத்தை சொல்லி நம்ம ஷான்-ஐ குஷி படுத்துவான்.

நமக்கு ஒன்றும் புரியாமல் நிமிர்ந்து பார்த்தால் ....குழிப்பணியாரம் வந்து விட்டிருக்கும். புரிந்ததடா உன் பூரிப்பின்  காரணம் என் எலும்பா ..!

'டேய் பில்லுல நான் சரி பாதி எல்லாம் ஷேர் பண்ணிக்க முடியாது ...திங்குறது மட்டும் வேணா ஷேர் பண்ணிக்குவேன்..' சொல்லிவிட்டு கெக்கே பிக்கே என்று சிரித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் ...குழிப்பணியாரம் காலி ஆகி இருக்கும். நாங்கள் காலி பண்ணி இருப்போம்.காண்டாகிபோய் பக்கோடா தட்டை எடுத்து கொண்டு தனி டேபிளுக்கு நகர்ந்து விடுவான் .

'ஐயோ மானத்த வாங்காத dog ...ஒழுங்கா வந்திரு ' என்றால் கேக்க மாட்டான். 

'....இப்போ என்ன ..உனக்கு ஒரு தனிபிளேட் பணியாரம் வேணும் ...அவ்வோளோதானே ...என் sponsor ...சொல்லிக்க ...' என்றால்  துள்ளி கொண்டு,  குழைந்து  நம்மீது ஈசி கொண்டு ஊளை இடுவான் .

கிளி 'ஐயோ ...மச்சி எதுக்கு காச காரியாக்குற ...' என்பான்...எல்லாம்சிரித்து விடுவோம். சிங்கம் மட்டும் சிரிப்பது போல் சேர்ந்து சிரித்து விட்டு சர்வரை கூப்பிட்டு பணியாரம் ஆர்டர் பண்ணுவதிலே  குறியாய் இருக்கும்.

சர்வர் கிட்ட வந்தவுடன் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் 'மச்சி ...sponsor  மறந்துராத ...'என்று 3 முறை தலாக் சொல்வது போல் confirm பண்ணிக்கொண்டு ஆர்டர் பண்ணுவான். ஆர்டர் சொல்லி முடித்தவுடன் ...நான்  ' அப்புடியே ரெண்டு பன்னீர் பக்கோடா '-என்று அழுத்தி சொல்லிவிட்டு '...அப்புறம் அந்த குழி பணியாரத்தை கேன்சல் பண்ணிடுங்க ...' என்று  மெதுவாக கூறி விட்டு சாப்பிட ஆரம்பித்ததும் எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க ...இப்போதுதான் நம்ம சிங்கத்தின் மண்டைக்குள் Processsor  slow motion -ல்   2 வருடத்திற்கு முன்  சாப்பிட்ட பன்னீர் பக்கோடா picture-ஐ   எல்லாம் தேடி எடுத்து கொண்டிருக்கும். 

காது கேட்கும்.. பட் மூளை முன்னாடி பேசிய வார்த்தைகளை இன்னும் process செய்து கொண்டிருக்க...'அந்த குழி பணியாரத்தை கேன்சல் பண்ணிடுங்க' வாக்கியம் பின்னால் க்யூவில் நின்றுகொண்டிருக்கும் .அது processor போவதற்குள் நாம பன்னீர் பக்கோடாவை முடிச்சிரலாம்.

பன்னீர் பக்கோடா வந்தவுடன்...கண்கள் பணியாரத்தை தேடி சோர்ந்து 'எங்க பணியாரம்...எங்க  பணியாரம் ..' என்று சர்வரோடு சண்டை போட ஆரம்பிக்க சர்வர் 'அது கேன்சல்  ஆயிடுச்சி சார் ..' என்று நமட்டு சிரிப்போடு சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து விடுவார்.

சிங்கம்புலி-க்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பிக்க ...பல்லை கடித்து ...கண்ணீரை அடக்க ஆரம்பிக்க...எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விடும்.

 அப்புறம் பணியாரம் முழுவதையும் சாப்பிட்ட பின்னர் தான் ' பிரகாச' ராஜ் ஆவார்.

இப்போது எல்லா ஐட்டமும் மொத்தமாக   சுடச்சுட வந்தது ...வந்தவுடன் நம்மாளுக்கு கண்ட்ரோல் பண்ணவே முடியாது...நீங்க என்ன கெட்ட வார்த்தை வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம் காதே கேக்காது ...அதில் ரெண்டு ...இதில் ரெண்டு என்று பொறுக்கி பாதியை தன் தட்டில் போட்டு கொள்வான். 

இப்போதும் அப்படிதான். ரவா தோசையில் பாதி, பூரி மசாலா-வில் முக்கால் பங்கு மசாலா-வும் ஒரு முழு பூரி எடுத்து கொண்டு மனது ஆறாமல் இன்னொரு பூரியிலும் கொஞ்சம் பிய்த்து போட்டு கொண்டான் . 

எல்லோரும் 

அடுத்து கொத்து பரோட்டா-வுக்கு வெயிட்டிங் ...

 'மச்சி ...கொத்து பரோட்டாவும் குலாப் ஜாமூனும் வந்த உடனே நீங்களே தின்றாதீங்கடா ...நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கங்கடா ...என்று கண்ணடித்து விட்டு ...கெக்கே பிக்கே என்று பூரி வாயோடு சிரிப்பான். குரு பொறுக்க முடியாமல் கடுப்பாகி அவன் தட்டில் எச்சில் துப்பி விடுவான்.

அதெல்லாம் கண்டுகிற ஆளா அது ...அந்த எச்சில் மேல் சிறிது தோசையை போட்டு துடைத்து அதை அப்படியே குருவின் தட்டில் போட்டு விட்டு - இது மட்டும் மிக வேகமாக செய்வான்- தள்ளி உக்கார்ந்து கொள்வான்.  குரு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அந்த தோசையை பேந்த பேந்த பார்த்து கொண்டு உக்கார்ந்து கொண்டிருப்பான். 


கார்த்தி இதெல்லாம் கவனிக்க எனக்கு நேரமில்லை என்பது போல் ...ரவா தோசையை கிள்ளி வெற்றிலை போல அதில் மசாலா + தக்காளி சட்னி + நடுவில் பாக்கு போல ஆனியன் பக்கோடா வைத்து சுருட்டி கண்கள் சொருக சாப்பிட்டு விட்டு ....குடிகாரன் ரேஞ்சுக்கு ...கண்ண விரிச்சு ...வாய குவிச்சு ...சொட்டான் விட்டு கொண்டே  "அடுத்து ஒரு முந்திரி பக்கோடா-டா ?" என்பான் . 

ஹோட்டலுக்குள் நுழையும்போது ' எனக்கு ஒரு பில்டர் காபி மட்டும் போதும் என்று  மலர்ந்த திருவாய் இந்த வாய் தான் '.

நேரம் ஆக ஆக சிக்கனத்தை  தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு நம்ம கார்த்திக் இலையில் ஆடும் கதகளி இருக்கே....

அவன் சாப்பிட்டு முடிக்கும்போது ஏதோ first நைட் முடித்த மாப்பிள்ளை போல ..தலை களைந்து.. காலர் கிளைந்து(?) ...வேர்த்து விறுவிறுத்து சந்தோசத்தில் கிறுகிறுத்து ... பில் சொல்லிறலாமா என்பான் .

அப்போதுதான் ஒரு பாட்டி எங்கள் பக்கத்தில் வந்து நின்றது . சுமார் 65 இருக்கும் . நல்ல மாநிறம். நெற்றியில் ராம கோடும் மடிசாரும் கம்பீர தோற்றமும் காதில் சிறிய கம்மலும் கழுத்தில் வெறும் கயிறுமாய். 

பார்த்தாலே சிறிது வசதியான அம்மணியாய் தெரிந்தார். 'வசதி'யாய் தெரிவதற்கு நகை தேவை இல்லை தோலின் பளபளப்பும் முகத்தின் தேஜஸும் போதும் . 

நாங்கள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அவரை பார்க்க அவர் சன்னமான குரலில் 'தம்பி...' என்றழைக்க நாங்கள் மீண்டும் கண்டுகொள்ளாமல் பேச ஆரம்பித்தோம் . சென்னையின் இன்னொரு கௌரவ பிச்சை போலும் என்று .

மறுபடியும் 'தம்பி ' அழைப்பு . இம்முறை சத்தமாய் . எல்லோரும் ஒரே மெண்டாலிட்டி-யில் தான் இருந்தோம் . காசு காணல.. ஆட்டோவுக்கு காசு குடு.. கேசு என்று. 

'என்னபாட்டி ..?' - குருவும் கார்த்தியும் கேட்க எங்கள் அனைவர் மனதும் வேகமாக பாட்டிக்கான வரலாற்றை தேடி ஓடியது.  கண்ணபிரான் சொன்னது ஞாபகம் வந்தது 'மனதின் வேகத்தில் ரதம் செலுத்துவேன் நான் ' என்று .

சிங்கம்புலி 'எதோ வயதான சர்வர் ஆர்டர் எடுக்க வந்துருக்கு போல ...நமக்கு வயிறு full ...ஸோ  திரும்பி பார்க்க தேவை இல்லை ..' என்று காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தான் .

 'ரெண்டு இட்லி வாங்கி தர்றியாப்பா ?' என்று நடுங்கிய பசிக்குரலில் .

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். வாய் நிறைய கொத்துபரோட்டாவோடு முதல் முதலாக மெதுவாக சிங்கம்புலி நிமிந்து பார்த்தான்.

குரு ஒரு யோசனையோடு  5ரூ காசை கொடுத்து 'இந்தாங்க ...' என்றதும் ...

'காசு வேணாம்பா ...பசிக்குது ரெண்டு இட்லி வாங்கி தர முடியுமா ?' என்றவுடன் எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

சட்டென்று நான் எழுந்து குடுகுடுவென்று ஓடிச்சென்று ஒரு செட் இட்லி வாங்கி வர அந்த கேப்பில் ஆளாளுக்கு சன் டிவி விஜய் டிவி க்ரைம் ரிப்போர்ட்டர் ரேஞ்சுக்கு டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டானுங்க .

ரெண்டு இட்லி வாங்கி வருவதற்குள் பாட்டி ஹிஸ்டரி பூரா சுருக்கமாக தெரிந்து விட்டிருந்தது .

பாட்டிக்கு மூணு பசங்க ...இரண்டு பெண்கள். இருந்தும் ஒன்றும் மதிக்கவில்லை . சொந்தமாக 3 வீடுகள், இருந்தும் மருமகள்கள் மதிப்பதில்லை.வயசான காலத்தில் கண்டுக்காமல் விடுவதே கொடுமைதான் . தனியாக கொடுமை செய்ய தேவையில்லை .

  சாதாரண சாமானியன் தப்பு செய்தால் தான் குற்றம். உயர் பதவியில் இருப்பவர் தப்பு செய்யாவிட்டாலும் ...நல்லது செய்யாவிட்டாலே - கண்டு கொள்ளாமல் விட்டாலே - அது குற்றம் தான் .  அது போல . 

ஒரு தலைவன் 'Baadu' ஆக இருந்தால் எத்தனை பேர் 'பாடு' பெரும்'பாடு' ஆகிவிடுகிறது ? எத்தனை பேரின் தலைவிதி மாற்றியமைக்க படுகிறது .

ஆதரவற்ற சிறுவர்களையும் பெரியவர்களையும் கவனித்து கொள்ள தனி -அஸோஸியேஷன் போன்ற ஒரு அமைப்பு வேண்டாமா ?. இவர்களை கவனித்து கொள்ளாத கவர்மெண்டெல்லாம் ஒரு கவர்மெண்டா ?

வாங்கி கொடுத்த இட்லியை அவர் எந்த வித கூச்சமோ சலனமோ இன்றி வேகவேக மாக   பிட்டு பிட்டு வாயில் போட்டு கொண்டிருக்க ...பார்த்து கொண்டிருந்த எங்கள் மனமும் இட்லி போல் பிய்ந்து கொண்டிருந்தது .

பாவம் ..நல்ல பசி . இரண்டு இட்லி ஒரு நிமிடத்தில் காலி . அவர் சாப்பிடும் வேகத்தை வைத்தே புரிந்து விட்டது. இன்னும் இரண்டு வாங்க போய் விட்டேன். ஏனோ மனது கனமானது . பாவம் என்ன கஷ்டமோ. 

வார்த்தை அம்புகள் மிகுந்த வலி ஏற்படுத்தி விடும் வல்லமை படைத்தவை . ஆண்களை விட பெண்கள் சிறந்த வில்லாளிகள் .அவர்களின் அம்பறா துணியில் வித விதமான அம்புகள் பாஸுபதாஸ்திரம் , நாகாஸ்திரம் ,பிரம்மாஸ்திரம் என ...மாமியாருக்கும் நாத்தனாருக்கும் கணவன்மார்களுக்கும் கூர்தீட்டப்பட்டு எப்போதும் தயாராக இருக்கும் .

பாவம் எந்த அம்பு தாக்கியதோ ? வயதான காலத்தில் தேவைகள் மிக குறைவு . 3 இட்லி கொஞ்சம் டீ ,சிறிது சாதம் காய்கறி , பின் காபியும்  2 தோசையும் ...ஆனால் இவை அனைத்தையும் நிறைய அன்பு கலந்து கொடுப்பது தான் முக்கியம். அதுதான் இப்போது கஷ்டமாகிவிட்டது .

 திரும்பி அந்த தலைமுடி களைந்த முகத்தையும்  குழி விழுந்த கண்களையும் பார்த்ததும் ...என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சட்டென்று வாஷ்பேஸின் சென்று கையலம்பி முகம் கழுவி வந்தேன்.

மனம் எவ்வளவு வெறுத்து போயிருந்தால் செருப்பு கூட அணியாமல் இந்த இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெகுதூரம் நடந்து வந்திருப்பார் அந்த பாட்டி.

இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்பதற்கும் அவருக்கு சங்கடம். நான் இன்னொரு பிளேட்டை  அவர் முன் வைத்ததும் சிறிது தடுமாறி 'உங்களுக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன் ...' என்று கூறிக்கொண்டே அதை எடுக்க நினைத்தவர் என்ன நினைத்தாரோ டக்கென்று கை அலம்ப போய்  விட்டார் ...'வேறெதுவும் வேணுமா பாட்டி ...'என்றதற்கு  'இல்லப்பா இதுவே பெருசு ...ரொம்ப நன்றிப்பா' என்று கண்களை இறுக்க மூடி கையெடுத்து கும்பிட்டார். அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொலபொல வென மூடிய கண்களில் இருந்து பெருக ....

எனக்கு மீண்டும் குபுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்க்க ...

'ஐயையோ ...என்ன பாட்டி இது ...நாங்கல்லாம் உங்க பையன் மாதிரி தான் போங்க...பஸ்ஸுக்கு காசு வச்சுருக்கீங்களா என்று கிளி  சூழ்நிலையை மாற்றுவதற்கு கேட்க...

நான் ஒரு 50 ரூபாயை எடுத்து கொடுக்க ...அதை வாங்க மறுத்து விட்டார் அந்த பாட்டி . எங்களுக்கு வெட்கமாக போய் விட்டது .

'வேறெதுவும் வேணுமா பாட்டி ...காபி கீபி  ?' - கார்த்தி

அவர் அந்த இரண்டு இட்லிக்கு மேல் வேறு எதையும் வாங்க மறுத்து விட்டார். அவர் மறுக்க மறுக்க எங்களுக்கு குற்ற உணர்வு மேலோங்கி கொண்டே சென்றது .

 'சரிப்பா ...நான் கிளம்புறேன் ..' என்று  பக்கத்தில் நின்ற என் தோலை தொட்டு விட்டு கிளம்பிவிட்டார்.

அதுவரை வேக வேகமாக சாப்பிட்டு கொண்டிருந்த நாங்கள் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே பிசைந்து கொண்டிருந்தோம்.

நெஞ்சை பிசைந்து விட்டு சென்று விட்ட பாட்டியை நினைத்து...

ஒரே அமைதி.

நான் அந்த 50 ரூபாயை வெறித்து கொண்டே 'பே ' வென்று நிற்க ...

'அவுங்க வேணாம்னுதான் சொல்வாங்க ...நீ போய் குடுத்துட்டு வா ...' -கிளி திடீரென்று சொல்ல .

எதோ அருள்வாக்கு கேட்டதை போல நான் அப்படியேஅந்த பாட்டியை தேடி ஓட ...

வேகமாக விரட்டி சென்றும் ...அந்த பாட்டியை பிடிக்க முடியவில்லை ...சட்டென்று மறைந்துவிட்டார் . அந்த வயதில்...அவ்வளவு வேகம் ...நடக்காத ஒன்று. எப்படி என்று தெரியவில்லை .

எல்லாம் நான் வருவதற்காக காத்து கொண்டிருக்க எனக்கு பாட்டி கிடைக்காத துக்கத்தில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது . நடுரோட்டில் உக்கார்ந்து ஹோ -வென்று அழ வேண்டும் போல இருந்தது . கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .

கூப்பிடு தூரத்தில் நண்பர் குழாம் . அவர்களை நெருங்க நெருங்க கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை எனக்கு . 

அழுவதை பார்த்தால் அவ்வளவு தான் ...ஓட்டு  ஓட்டென்று ஓட்டி விடுவான்களே ...அந்த டென்ஷன் வேறு. அதுவும் நானென்றால் கேக்கவே வேணாம். எல்லோரையும் நான் கலாய்ப்பதால் ,என்னை வைத்து செய்வதற்கு காத்துக்கொண்டிருப்பார்கள் .

நானும் கண்ணை கசக்கி துடைத்து ஒரு வழியாக சமாளித்து செயற்கையாக ஒரு சிரிப்புசிரித்து ...வேறு பக்கம் திரும்பி பாட்டி போய்ட்டாங்கடா ' என்று கூறி விட்டு நிற்காமல் நடக்க ஆரம்பித்தேன் .

குடுகுடுவென்று என் பின்னால் ஓடி வந்து என் தோளில் கை போட்டு கொண்ட அனைவரும் ஒரே மாதிரி 'சரி  விடுறா ...போலாம் வா ' என்றவுடன்...என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொங்கிவிட்டது.

சட்டென்று குனிந்து செருப்பை சரி செய்து ,நிமிராமல்,நீங்க முன்னாடி போங்கடா இதோ வந்துர்றேன் என்றேன் . ஆனால் தூங்க மூஞ்சியான் கவனித்து விட்டான். நான் என்ன செய்தாலும் மூதேவி கவனித்து விடும்.

மெதுவாக தோளை தொட்டு 

"என்ன மாமு ...கண்ணெல்லாம் செவந்திருக்கு ?"  என்றான். அவ்வளவு தான். சிரித்து சமாளிக்க ஆரம்பித்து....ஒரு பெரிய தேம்பலுடன் 'ஹோ ..!!' வென்று  அழுக ஆரம்பித்து விட்டேன். கம்ப்ளீட் சரண்டர்  . எல்லாம் உடைந்து வெளியேறிக்கொண்டிருக்க...அவன் என் தோளை தட்டி கொண்டிருந்தான்.

யாராவது குமுறி கொண்டிருக்கும்போது தோளையோ ...முதுகையோ தட்டி கொடுத்து பாருங்களேன். அடக்கி வைத்திருக்கும் அத்தனையும் பொங்கிவிடும் .

 திரும்பி பார்த்த அனைவரும் ஜெர்க்காகி விட்டனர். ஏனென்றால் நடு ரோட்டில் காலை விரித்து உட்கார்ந்து நான் கதறி கொண்டிருந்தேன்.

பின்னர் பக்கத்து கடையில் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்து குடிக்க கொடுத்து 'சரி ...விடுறா'...என்று என்னை ஆசுவாச படுத்தி கூட்டிச்செல்ல அரைமணிநேரம் ஆகிவிட்டது.

அன்று நடுரோட்டில் அமர்ந்து வெட்கமில்லாமல் அழுதது இன்று நினைத்தாலும் வெட்கமாகிப்போகும் .ஆனால் குரு இன்றும் அதற்காக பெருமை பட்டுக்கொள்வான். 'எங்களுக்கெல்லாம்  அழுகை வந்துச்சா மச்சி...'என்பான். உனக்கு இ..ளகிய மனசு - என்பான் வடிவேலு குரலில் .

எனக்கு மட்டும் அந்த பாட்டியின் குரல் இன்றும் ...15வருடங்கள் கழித்தும்...

'ரெண்டு இட்லி வாங்கி தரமுடியுமாப்பா ...?' -ஒலிக்கும் அவ்வப்போது ..!!

 


 




 


 




 

 

 

 

 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்