முதல் மரியாதைக்கு முதலில் கிடைத்த மரியாதை

  முதல் மரியாதைக்கு முதலில் கிடைத்த மரியாதை (title -ஹவ் ஈஸ் இட் ?😎)

"எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு..."என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா!

முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்!இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும், பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர், நடிகையாகத் தேர்வு செய்தது.

கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள், இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி! அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு.

திருப்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடையும், ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல் கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது. காதல் தோல்வியடைந்த இளசுகள் மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக் கெஞ்சுவார்கள். ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் பாரதிராஜாவை அண்ணாந்து பார்க்க வைத்தது. இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த வரலாற்றுச் சுவடு. ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா பட்டபாடு சொல்லி மாளாது!

தஸ்தாவெஸ்கி! உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் கதையை வைத்து முதல் மரியாதை படத்திற்கான கரு கதாசிரியர் ஆர்‌. செல்வராஜ் மூளையில் உதித்தது. இந்த செல்வராஜ் சிறுவயது முதலே பாரதிராஜா, இளையராஜா இவர்களோடு நெருங்கிப் பழகி வந்தவர். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவின் அண்ணன் மகன். `

'குற்றமும் தண்டனையும்', 'கரமசோவ் சகோதரர்கள்’ என்று தஸ்தாவெஸ்கி எழுதிய எல்லாம் இன்றும் கொண்டாடப்படும் ஆகச் சிறந்த படைப்புகள். அரசைக் கடுமையாக எதிர்த்து எழுதக்கூடியவர் தஸ்தாவெஸ்கி. அவர் வறுமையில் வாடினாலும் அரசை எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். எனவே அவருக்கு மரண தண்டனையை விதித்து அரசு உத்தரவிட்டது.

தூக்குமேடைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அவருடைய எழுத்தை வாசிக்கும் ஆதரவாளர்கள் சிலர் அதிகார மையங்களில் இருந்தனர். எனவே, அரசிடம் 'அவரை ஒருமுறை மன்னித்துவிடலாம்’ என்று கோரிக்கை வைத்தார்கள். அது ஏற்கப்படவில்லை. பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கெனச் சில விதிமுறைகள் இருந்தன. அதில் முக்கியமானது கைதியின் உடல் எடை குறையக் கூடாது. எடை குறைந்தால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிடும். அப்படியாக, தூக்கிலிடும் நாளுக்கு முன்பாக தஸ்தாவெஸ்கியின் எடையைப் பார்த்தபோது, அவர் எடை குறைந்திருந்தார். அதனால், அவர் தூக்கிலிடப்படவில்லை. பின்னர், அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலையானார்.

அதன் பிறகு மீண்டும் அவர் கடனால் கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். கடனால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க... மூன்று மாதங்களுக்குள் அவர் ஒரு நாவலை எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றத் தரப்பில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.

தஸ்தாவெஸ்கி அப்போது ஓர் உதவியாளர் மட்டும் தேவை என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அவருக்கு அன்னா என்கிற இளம்பெண்ணை உதவியாளராக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியை தொடக்கத்தில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. 'என்னடா ஒரு கிழவன்கிட்டே வந்து மாட்டிக்கிட்டோமே..’ என்று நொந்து போனார் இளம்பெண் அன்னா. வேறு வேலைக்குச் செல்லவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். இந்தச் சூழலில் தஸ்தாவெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல... அந்தப் பெண் டைப் செய்துகொண்டே வந்தார்.

மெள்ள மெள்ள அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப்போகிறது. காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள். குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால், அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார். அந்த நாவல்தான் `குற்றமும் தண்டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்; கடனையும் அடைத்துவிடுகிறார். அதன்பின், அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது. அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள். அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள். தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப்போக, அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார்.

அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை. அவள் இல்லாமல் வாழ முடியவில்லை. தஸ்தாவெஸ்கி இறந்து, 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே இருக்கிறாள். இந்த உண்மைச் சம்பவம் கதாசிரியர் ஆர். செல்வராஜ் மனதைப் பாதித்தது. அதுதான் அவருடைய எழுத்தில் `முதல் மரியாதை’ படமாக உருவானது!

அந்த இருவரின் களங்கமில்லா அன்புதான், `முதல் மரியாதை' படத்தின் அடிநாதம். அன்பு என்பது உடலால் வருவதல்ல, மனதால் வருவது. இந்தக் கதையைச் சொன்னதும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. பாம்குரோவ் ஓட்டலில் வைத்து ஆர் செல்வராஜிடம் ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, 'என் வாழ்வும் தாழ்வும் உன் கையில்தான் இருக்கு... இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்’ என்று சொன்னார். 'இது எனக்கு எதுக்கு... நீங்க வீட்டை வேற அடமானம் (அப்போது தி.நகரில் உள்ள ஒரு வீட்டைப் படம் எடுப்பதற்காக பாரதிராஜா அடமானம் வைத்திருந்தார்) வெச்சிருக்கீங்க... வேண்டாம்’ என மறுத்தார் ஆர். செல்வராஜ்.

பிறகு, பெங்களூருவில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை ஒதுக்கித் தந்தார். அறை எண் 46. ஏறக்குறைய 40 நாட்கள் 'முதல் மரியாதை’ படத்தின் திரைக்கதையை எழுதினார் செல்வராஜ். அவ்வப்போது பாரதிராஜா வருவார். தேவையானதைச் செய்து கொடுத்துவிட்டு, திரும்பிச் செல்வார். ஒருநாள் அவரை அழைத்து 'ஸ்கிரிப்ட் ரெடி.. வாங்க’ என்று அழைத்தார் செல்வராஜ். அன்றே, சென்னையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஸ்கிரிப்ட்டைப் படித்தார். 'நட்புக்கும் காதலுக்கும் இடையே நீ ஒரு கப்பல் ஓட்டியிருக்கே... இந்தக் கப்பல் கரை தெரியாத கடலில் மிதக்குது.. கதை சூப்பர்... சூப்பர்!' என்று, பாராட்டினார். உடனே, தொலைபேசியில் சித்ரா லட்சுமணனை அழைத்து, படப்பிடிப்புக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னார்.

கதை பிரமாண்டமாக இருந்தது. ஏற்கனவே சிவாஜிகணேசனை ஒரு படத்திலாவது இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த பாரதிராஜாவே சொன்னார்.. 'நாம சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம்...’

நடிகர் திலகம் சிவாஜி பொதுவாகவே கதை கேட்காமல் எந்தப் படத்தையும் ஒப்பு கொள்வதில்லை! அவரிடம் போய் பாரதிராஜா, 'அண்ணே... இதுதான் படத்தோட ஐடியா, நீங்க நடிச்ச நல்லா இருக்கும்' என்று நான்கு வரியில் படத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார். அப்போது உச்சத்தில் இருந்தார் இயக்குநர் பாரதிராஜா.

அவர் மீது கொண்ட நம்பிக்கையில் நடிகர் திலகமும் ஒப்புக்கொள்கிறார்.

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் என்ற மலைக்கிராமத்தில் படப்பிடிப்பு. காவிரிக்கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம். சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம். எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர். இயக்குநரும் வந்து சேர்கிறார். அப்போது நடிகர் திலகம் திரிசூலம் ராஜசேகர் கெட் அப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார். அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு செம மூட் அவுட்! படப்பிடிப்புக் குழுவை விட்டுத் தள்ளி வெகுதூரம் போய் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். பற்ற வைக்கிறார்...கிறார்... சிகரெட் பாக்கெட் காலியாகிறது.

நடிகர் திலகம் உட்பட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி! முதல் ஷாட் வைக்க வேண்டிய முகூர்த்த நேரமும் கடந்துவிட்டது. நடிகர் திலகம் ஏதோ குழப்பம் என்பதை மட்டும் உணர்கிறார் .அப்போது உதவி இயக்குநராக இருந்த சித்ரா லட்சுமணனை அழைத்து 'அந்தக் கருவாயனுக்கு என்ன பிரச்சினையாம்!' எனக் கேட்கச் சொல்கிறார். சித்ராவும் இயக்குநரிடம் போய் அமைதியாக நிற்கிறார். இயக்குநர் 'பேக்கப்' என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்!

யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே 'சுடச் சுட' இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்குத் தெரிவிக்கப்படுகிறது . தட்ட முடியாமல் சாப்பிட வருகிறார். நடிகர் திலகம் உட்கார்ந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் உற்சாகமாகி, 'அண்ணே...இதான் எனக்கு வேணும்! இப்படியே இருங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்' என்று சாப்பிட மறந்து படப்பிடிப்புக்குத் தயாராகிறார் இயக்குநர்.

நடிகர் திலகத்திற்கு பேரதிர்ச்சி! மேக் அப், விக் இல்லாமல் நடிச்சா தன்னோட ரசிகர்கள் எப்படி ஒத்துக்குவாங்க என்று இயக்குநரிடம் எவ்வளவோ சொல்கிறார். 'அண்ணே, நான் சொல்றேன்...நல்லா வரும் வாங்க', என்று சொல்ல படப்பிடிப்புத் தொடங்குகிறது.

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் சிவாஜி, ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார். அப்போதுதான் கவனித்தார்கள். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை. தவறு நடந்துவிட்டது. கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது.

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றார் பாரதிராஜா. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன்’ என வைராக்கியமாக இருக்கும் பாத்திரம் சிவாஜிக்கு. ‘‘படப்பிடிப்பில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னார் பாரதிராஜா. சிவாஜி ஒரு கணம் ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார்.

அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள். அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார். செருப்பு, அவர் தங்கியிருந்த அறையிலேயே கிடந்தது. அவர் செருப்பே இல்லாமல் நடிப்பதால் அவருடைய காலில் முள்ளோ, கல்லோ தைத்துவிடக் கூடாது என்ற கவனம்பாரதிராஜா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு இருந்தது. அவர் நடிக்கப் போகும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைக்கச் சொல்லியிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஏன் அந்த இடத்தைப் பெருக்கறீங்க’’ எனக் கேட்டார். ‘‘உங்க கால்ல முள் தைச்சுவிடக் கூடாதேன்னுதான்’’ என இழுத்தார் பாரதிராஜா.

‘‘அட யாருப்பா நீங்க... பெருக்கறத நிறுத்தச் சொல்லு மொதல்ல. காட்லயும் மேட்லயும் இப்படித்தான் சுத்தமா பெருக்கி வைப்பாங்களா? இயற்கையா இருந்தாத்தானே சரியா இருக்கும்?’’ எனச் சொல்லிவிட்டார்.

பக்கம் பக்கமாக வசனம் இருக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி. அதுவும் இல்லை! அண்ணே, இப்படி உட்காருங்க இத மட்டும் சொல்லுங்க என்று பாரதிராஜாவுக்கே உரிய ஸ்டைலில் படப்பிடிப்பு போகிறது. ஒருநாள், 'அண்ணே, லைட் போகப்போகுது... சீக்கிரம் வாங்க என்கிறார். அண்ணே, அந்த மரத்துல கை வச்சு நில்லுங்க... அப்படியே திரும்பி நடந்துவாங்க...' என இயக்குநர் சொல்ல, 'டேய் நான் சிவாஜிடா... என்ன காட்சி, எதுக்கு நடக்கணும்.. என்ன சிச்சுவேஷன்னு கூட சொல்லாம நடன்னா என்னடா அர்த்தம்' என்று ஒரு கட்டத்தில் பொங்கியிருக்கிறார். ஆனால் அசரவில்லை இயக்குநர். மொத்தப் படப்பிடிப்பும் இப்படியே நடந்து முடிகிறது.

தேவையில்லாமல் வந்து மாட்டிக்கிட்டேன் என்கிற மனநிலையோடு இயக்குநர் சொன்னதை மட்டும் செய்துவிட்டு வருகிறார் நடிகர் திலகம். அவர் கேரியரில் இதுபோல் நடப்பது இதுதான் முதல் முறை! இயக்குநர் மீது ஏக வருத்தம்...

சென்னைக்கு வந்து மொத்தப் படத்தையும் எடிட் பண்ணி ஒவ்வொரு ஆர்டிஸ்டாக டப்பிங் பேச வைக்கிறார் இயக்குநர். எல்லோரும் பேசியாச்சு. நடிகர் திலகம் மட்டும்தான் பாக்கி. அவர் எந்த மீட்டரில் பேச வேண்டும் என்று இயக்குநர் ட்ராக் பேசி வைத்திருக்கிறார். அண்ணன் வந்து அதை மட்டும் பேசிக் கொடுத்தால் போதும் என்று தகவல் போகிறது அன்னை இல்லத்துக்கு.

நடிகர் திலகம் இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிகிறது. சமாதானம் செய்து அழைத்து வருகிறார்கள். மொத்தப் படத்தையும் பார்க்க மறுத்துவிட்டு, அவர் பேச வேண்டிய ரீலை மட்டும் போடச் சொல்லி டப்பிங்கை முடித்துக் கொடுக்கிறார்.

சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ரஞ்சனி, தீபன், வீராசாமி, அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள். படத்தின் உச்சபட்சக் காட்சி. அன்று படப்படிப்பில் 92 பேர். காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில், பாரதிராஜாவின் திரையுலக குருவான புட்டண்ணா கனகல் மறைந்துவிட்டதாகச் செய்தி. பதறிப்போய்விட்டார் பாரதிராஜா. ‘‘நான் உடனே அவருடைய மறைவுக்குப் போயாக வேண்டும்’’ எனக் கதறுகிறார். ‘‘இவ்வளவு கலைஞர்களைக் காக்கவைப்பது சரியில்லை. நாம் இன்னொரு நாள் அவருடைய வீட்டுக்குப் போய்வருவோம்’’ எனச் செல்வராஜ் போன்றவர்கள்சொல்லியும், பாரதிராஜா கிளம்பிப் போய்விட்டார்.

‘முதல் மரியாதை’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பிப்போன பாரதிராஜா, பாதி வழியில் என்ன நினைத்தாரோ... மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர் கண்ணீர் நிற்கவில்லை. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து, சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அவருடைய குருவுக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தார்கள். இங்கே படப்பிடிப்பு நடத்த அவர் மனம் கேட்கவில்லை. எல்லோரும் ஒருவழியாக அவரைத் தேற்றினார்கள். ஒருவழியாக அந்த ஷெட்யூல் முடிந்ததும், கதாசிரியர் செல்வராஜும் பாரதிராஜாவும் புட்டண்ணாவின் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தார்கள்.

இப்படியாக, படப்பிடிப்பு ஆரம்பித்த 100 ஆவது நாளில் படம் ரெடியாகிவிட்டது. இசையமைப்புக்காகப் படத்தை இளையராஜாவிடம் போட்டுக் காட்டினார்கள். அவர் பார்த்துவிட்டு, `படம் நல்லாயில்ல... இதைத் தூக்கிப்போடச் சொல்லு. தீபன், ரஞ்சனியை வைத்து வேறு கதையை பாரதிராஜாவைப் பண்ணச் சொல்லு. ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்காரு. இந்தப் படம் வந்தா மேலும் கஷ்டப்படுவார்’ என்று சொல்லிவிட்டார் கதாசிரியர் செல்வராஜிடம். இயக்குனர் பாரதிராஜாவுக்குப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

கதாசிரியர் செல்வராஜிடம், 'இளையராஜா என்ன சொல்றார்.. பேசாமல் ரீ-ரெக்கார்டிங் பண்ணச் சொல்லு’ என்று சொன்னார் பாரதிராஜா. ரெக்கார்டிங் முடிந்ததும்,'பாரதி... நாம பேசினபடி அவருக்கு என்ன சம்பளமோ அதை கொடுத்துடுவோம்’ என்று சொன்னார் செல்வராஜ். அவரும் பணத்தை எடுத்து, கையில் கொடுத்து இளையராஜாவிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். பணத்தை எடுத்துக்கொண்டு போனார் செல்வராஜ். `என்ன...’ என்று கேட்டார் இளையராஜா. `பாரதி.. பேமென்ட் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்’ என்றார் செல்வராஜ். 'எனக்கு வேண்டாம்... எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு...’ என்றார். `யோசித்துப் பாருங்கள்...’ என்று சொல்லியும், `முடியவே முடியாது’ என்று, பணத்தை வாங்க இளையராஜா மறுத்துவிட்டார்.

பிறகு, படத்தைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார்கள்.. அவர் படம் பார்த்து, முடித்ததும், 'இந்தக் குதிரை அதிர்ஷ்டத்தில் கூட ஜெயிக்காது’ என்று சொன்னார். ஆனாலும், பாரதிராஜா பயப்படவில்லை...சோர்ந்துபோகவில்லைஇந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

அப்போது, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் `சுபாஷினி தியேட்டர்' இருந்தது. அந்த தியேட்டரில் படத்தைப் போட்டு, படத்தில் பணியாற்றிய மற்றும் நெருக்கமான நண்பர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் படம் பார்க்க அழைத்தார்கள். அவர்களது கையில் ஒரு பேப்பரைக் கொடுத்துவிட்டார்கள். படம் பார்த்து முடித்துவிட்டு, அவரவர் கருத்துகளை அதில் எழுத வேண்டும். பெயர் அவசியமில்லை என்று சொல்லப்பட்டது. படத்தைப் பார்த்த பல பெண்கள் `சூப்பர்... பிரமாதம்’ என்று எழுதிவிட்டனர். இப்படியாக, இரண்டு மூன்று முறை வெவ்வேறு ஆட்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள்.

இதன்பின், படத்தின் மீது பாரதிராஜாவுக்கு மிகப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது. செல்வராஜும் பாரதிராஜாவும் தாஜ் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, பரிமாறுபவரை அழைத்து பில் கொண்டு வரச் சொன்னார்கள். அவர், `ஏற்கெனவே பணம் கட்டிவிட்டார்கள் சார்’ என்றார். யார் என்று தேடினால், அத்தானி பாபு என்கிற கோயம்புத்தூர் விநியோகஸ்தர். இவர்களுக்காகப் பணம் செலுத்தியிருந்தார். அவர் படம் பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் பிடித்திருந்தது. அவர் பாரதிராஜாவிடம், `முதல் மரியாதை படத்தை நான் வாங்கிக்கிறேன் சார்’ என்று சொன்னார். பிறகு, ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது

படம் மகத்தான வெற்றியடைந்ததும் ‘‘ஏம்பா... எனக்குக் கொடுக்க இருந்த சம்பளத்தைக் கொடுங்கப்பா’’ என இளையராஜா பாரதிராஜாவிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார். பாரதிராஜாவோ, ‘‘எப்ப வேணாம்னு சொல்லிட்டியோ, அதோட விட்டுடு... உனக்குச் சம்பளம் தரவே மாட்டேன்’’ என ஒற்றைக்காலில் நின்றுவிட்டார்.

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு?” என விசாரித்தார்கள். அன்றைய தேதியில் 25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் கேட்டது, ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட். பாரதிராஜா இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த விலை சொன்னார். 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது. லாபம் கோடிகளில் கொட்டியது...

 

நன்றி :🙏 கு பண்பரசு  &  Balaji Srinivasan


 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Natural Products for இயற்கை வாழ்வு

Dry Cough -வறட்டு இருமல்