தமிழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்து உலகத்தர சினிமாக்கள் வழங்கியவர்கள் என்று பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால் சில நல்ல ஷாட்கள், கவித்துவமான சில காட்சிகள், ஆங்காங்கே இலக்கிய அடையாள உதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் ‘உலக சினிமா’வை உருவாக்கிவிட முடியும் என்று நம்புபவர் மிஷ்கின். எந்த நிலத்துக்கான சினிமா எடுக்கிறாரோ, அந்த நிலத்தின் மணல்துகள்கள் அவர் படங்களில் இருப்பதில்லை. மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார். அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே. மிஷ்கின் படத்தில் பட்டப்பகலில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும். ஒரு பணக்கார குடும்பம்,...